குழந்தையின் அழுகையை நிறுத்தும் குழந்தை பொங்கல் பற்றி தெரியுமா.?
சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி அருகில் அமைந்துள்ள கிராமங்கள் தலைமுறை தலைமுறையாக வினோத வழிபாடு ஒன்றை அம்மக்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் லம்பாடி இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். அந்தப் பெண் தெய்வம் குழந்தைகளின் நோய் நொடியை போக்கி, அவர்களை அழுகாமல் பார்த்துக் கொள்வதாக நம்புகின்றனர். அந்த தெய்வத்திற்கு பொங்கல் வைத்து வழிபடுவதை தான் குழந்தை பொங்கல் என்று இன்றளவும் அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் நிறைமாத கர்ப்பிணியான லம்பாடி இன பெண் ஒருவர் வழிப்போக்கராக வந்துள்ளார். மலைவாழ் மக்களில் ஒருவரான அவர் வந்த போது மிகவும் இருதாகி விட்டதால் அவர்களது சொந்த ஊருக்கு போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குமாரபாளையம் கிராம எல்லையில் சாலையோர மரத்திற்கு அடியில் அவர் தங்கியுள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில் மரத்தடியிலேயே ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் தாயும் சேயும் அதே இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனால்தான் அந்தப் பெண்ணிற்கு அதே இடத்தில் சிலை வைத்த மக்கள் அந்த பெண்ணை காவல் தெய்வமாக எண்ணி வழிபாடு செய்து வருகின்றனர். குழந்தை பெற்றெடுத்த பெண்கள் தங்கள் குழந்தையுடன் அந்த பகுதிக்கு சென்று அந்த அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்து குழந்தைகளை பாதுகாக்க சொல்லி பிரார்த்தனை செய்வார்களாம். குழந்தை விடாமல் அழும் நாட்களில் இந்த கோவிலுக்கு சென்று அவர்கள் வழிபடுவார்களாம்.