ஒரே மாதிரி சிக்கன் செய்ய போரடிக்குதா.! இந்த ஈஸியான ஜப்பான் சிக்கன் செய்து பாருங்க.!?
நவீன காலகட்டத்தில் சைவ உணவுகளை விட அசைவ உணவு பிரியர்கள் பெருகிக்கொண்டே வருகின்றனர். தற்போது வாரத்திற்கு இரண்டு முறையாவது வீட்டில் அசைவ உணவை சமைத்து வருகிறோம். அவ்வாறு சமைக்கும் போது விதவிதமான சுவையில் சாப்பிட வேண்டும் என்று பலரும் விரும்புவோம். குறிப்பாக வீட்டில் சிக்கன் சமைக்கும் போது எப்போதும் ஒரே மாதிரி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான சுவையில் ஜப்பான் சிக்கன் செய்து பாருங்க?
தேவையான பொருட்கள்
எலும்பு நீக்கிய சிக்கன் - 1/2 கிலோ, வெண்ணை - 1 டீஸ்பூன், பூண்டு - 10, பால் - 2கப், பச்சை மிளகாய் - 5, வறுத்து பொடியக்கிய முந்திரி - 1/4 கப், சர்க்கரை 1/2 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, வெள்ளை மிளகு பொடி - 1தேக்கரண்டி, மைதா - 2 டீஸ்பூன், சோளமாவு -1 தேக்கரண்டி, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் எலும்பு நீக்கிய சிக்கனை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மைதா மாவு, வெள்ளை மிளகு பொடி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதில் சிக்கனை சேர்த்து மாவு நன்றாக சேரும்படி கலக்க வேண்டும். 15 நிமிடம் வரை சிக்கன் ஊறிய பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சிக்கனை பொன்னிறமாக பொறித்து எடுக்க வேண்டும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து உருகிய பின்பு சிறிது சிறிதாக வெட்டிய பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பின் கடாயில் பால் ஊற்றி வறுத்து பொடியாக்கிய முந்திரி, வெள்ளை மிளகு பொடி, சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக கலந்து விட்டு சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும். பால் நன்றாக வற்றி சாஸ் பதத்திற்கு வரும். இதில் பொறித்த சிக்கனை சேர்த்து மூன்று முதல் நான்கு நிமிடம் வரை வதக்க வேண்டும். சிக்கன் சாஸுடன் நன்றாக கலந்து வரும். பின்பு சிறிதளவு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ஈஸியான ஜப்பான் சிக்கன் ரெடி.