அடுப்பில்லாமல் சுவையான ஆப்பிள் பேடா செய்யலாம்.! எப்படி தெரியுமா.?!
தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் அடுப்பில்லாமல் சமையல் செய்யும் முறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த முறையில் புதுப்புது விதமாக பல உணவுகளை அடுப்பில்லாமல் சமைத்துக் காட்டி வருகின்றனர். ஒரு சில உணவுகளை அதிகமாக சமைப்பதனால் அதிலுள்ள சத்துக்கள் அழிந்து விடும். ஆனால் இந்த அடுப்பில்லாமல் சமையல் செய்யும் முறையில் அந்த உணவுகளில் இருக்கும் சத்துக்கள் அப்படியே நம் உடலுக்கு கிடைக்கும்.
இவ்வாறு அடுப்பில்லாமல் வடை, பொரியல், குழம்பு போன்ற பலவற்றை செய்து பார்த்திருப்போம். ஆனால் அடுப்பில்லாமல் இனிப்பு வகைகள் எப்படி செய்வது என்பது குறித்து தெரியுமா? அடுப்பில்லாமல் இனிப்பான சுவையான ஆப்பிள் பேடா செய்யலாம் வாங்க பாக்கலாம்.
தேவையான பொருட்கள்:
பொட்டுக்கடலை - 1கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
காய்ச்சாத பால் - 4 டேபிள் ஸ்பூன்
முதலில் மிக்ஸியில் பொட்டுக்கடலை போட்டு நன்கு பொடியாக அரைத்து எடுத்து தனியாக வைத்து கொள்ள வேண்டும். பின்பு அதே மிக்ஸியில் சர்க்கரை சேர்த்து பொடியாக அரைக்க வேண்டும். சல்லடையில் பொட்டுக்கடலை மாவு கொட்டி கட்டி கட்டியாக இல்லாமல் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். மாவு மற்றும் சர்க்கரையை சேர்த்து நெய் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
நன்கு கலந்தவுடன் காய்ச்சாத பால் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்து கொள்ள வேண்டும். தேவைபட்டால் பிசைந்த மாவில் ஒரு சொட்டு அளவிற்கு சிவப்பு நிற புட் கலர் சேர்த்துக் கொள்ளலாம். பின்பு மாவை சின்ன உருண்டைகளாக உருட்டி ஆப்பிள் வடிவத்திற்கு செய்து மேல் பக்கத்தில் ஒரு விரலை வைத்து அழுத்தினால் ஆப்பிள் வடிவம் போல் மாறிவிடும். ஆப்பிளின் காம்பு வடிவத்திற்கு ஆப்பிளின் மேல் ஒரு கிராம்பு எடுத்து வைத்தால் அச்சு அசல் ஆப்பிள் போலவே இருக்கும் என்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.