அயோத்தி ராமர் கோவில்: "நிலநடுக்கமே அசைக்க முடியாது.." கற்களில் கட்டிடக்கலை அதிசயம்.!
உத்திரபிரதேச மாநிலத்தின் அயோத்தி ஸ்ரீராமர் கோவிலின் கும்பாபிஷேகத்திற்காக தயாராகி வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வருகின்ற 22ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கும் நிலையில் வருகின்ற 15-ம் தேதி முதல் ராமர் கோவிலின் திறப்பு விழா சடங்குகள் நடைபெற இருக்கிறது. இத்தனை காலமும் விழியில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்த குழந்தை பருவ ஸ்ரீ ராமரின் சிலை வருகின்ற 22 ஆம் தேதி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.
இந்நிலையில் ராமர் கோவிலின் கட்டிடக்கலை சிறப்புகள் மற்றும் ராமர் கோவில் கட்டுமானத்தின் போது சந்தித்த சவால்களை ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்திருக்கிறார். ராமர் கோவில் கட்டுமானத்திற்காக கொடுக்கப்பட்ட 6 ஏக்கர் நிலம் ராமஜென்ம பூமி வசம் ஒப்படைக்கப்பட்டபோது கோவில் கட்டுமானத்திற்கான அடித்தளம் அமைப்பது தொடர்பாக அந்த நிலத்தின் மண் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பரிசோதனையில் மணலின் அடர்த்தி குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் வலுவான அடித்தளம் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஐஐடி டெல்லி சென்னை பம்பாய் கவுஹாத்தி தேசிய புவியியல் ஆய்வு நிறுவனம் சிஆர்பிஐ மற்றும் லார்சன் & டர்போ ஆகிய நிறுவனங்களின் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியை சுற்றியுள்ள மணல் முழுவதுமாக அகற்றப்பட்டு 56 அடுக்குகளை கொண்ட ரோல்டு காம்பேக்ட் கான்கிரீட் ஓடப்பட்டு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் பாறை போன்ற உறுதியான அடித்தளத்தின் மீது ராமர் கோவிலின் கட்டுமான பணிகள் தொடங்கி இருக்கிறது. பிற கட்டிடங்களைப் போல் இல்லாமல் வட இந்தியாவின் பாரம்பரிய கட்டிடக்கலைகளில் ஒன்றான நகரா கட்டிடக்கலையை பயன்படுத்தி இந்த கோவில் கட்டப்பட்டிருக்கிறது. நகர கட்டிடக்கலை என்பது முழுவதுமாக கற்களை பயன்படுத்தி கட்டப்படும் ஒரு கட்டிடக்கலை ஆகும். இந்தக் கட்டிடக்கலை வட இந்தியாவின் இமயமலைத் தொடர்களில் இருந்து விந்திய மழை தொடர்கள் வரை இருக்கும் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு கட்டிடக்கலையாகும். கஜுராஹோ குகை கோவில் சோமநாதர் ஆலயம் மற்றும் சூரிய கோவில் ஆகியவை இந்த கட்டிடக்கலையை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கிறது.
ராம் மந்திர் முழுவதுமாக கற்களை பயன்படுத்தி கட்டப்பட்டிருக்கும் ஒரு கோயில் ஆகும். இந்த கோவிலின் கட்டுமானத்தில் இரும்பு ஸ்டீல் மற்றும் சிமெண்ட் போன்றவை பயன்படுத்தப்படவில்லை என இதன் கட்டுமான பணியில் ஈடுபட்டிருக்கும் ஐஐடி பேராசிரியர்களில் ஒருவர் தெரிவித்திருக்கிறார். கற்களை பயன்படுத்தி கட்டுவதால் கோவில் நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும் எனவும் தெரிவித்திருக்கிறார். இந்தக் கோவில் நிலநடுக்கத்தால் சேதம் ஏற்படாத வகையில் கட்டப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இரும்புகளை பயன்படுத்துவதால் அவை துருப்பிடித்து விடும் எனவே கட்டுமானத்தில் எந்தவித இரும்பு மற்றும் ஸ்டீல் பயன்படுத்தவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.
இந்த கோவிலின் கட்டுமானத்திற்கு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து இளஞ்சிவப்பு நிற கற்கள் சிறப்பாக வரவழைக்கப்பட்டு இருக்கின்றன. சாதா கற்களை விட இந்த கற்கள் நீண்ட ஆயுள் கொண்டவை என்பதால் இவை பயன்படுத்தப்பட்டிருப்பதாக கட்டுமான துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ராமர் கோவில் கட்டுமானத்தில் ஒவ்வொரு கற்களும் செதுக்கப்பட்டு ஒன்றன் மீது ஒன்று பொருத்தி வைக்கப்பட்டு பண்டைய கால கட்டிடக்கலை மற்றும் நவீன கட்டிடக்கலையும் இணைந்து உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.