மீண்டும் அரசியலில் ரஜினி?… பாஜகவின் திட்டம் என்ன?… ஜெய்ஷாவுடன் மேட்ச் பார்த்ததால் பரபரப்பு!
உலகக்கோப்பை தொடரின் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான அரையிறுதி போட்டியின்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனான ஜெய்ஷாவுடன், ரஜினிகாந்த் சேர்ந்து அமர்ந்து கிரிக்கெட் பார்த்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியை நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் நேரில் கண்டு ரசித்தார். அதன்படி, பல பிரபலங்கள் டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் தலைவரான சந்திரசேகரன், ஷிகர் தவான் உள்ளிட்டோர் ரஜினியின் அருகில் அமர்ந்து மேட்ச்சை கண்டு களித்தனர். அதேபோல், நடிகர் ரஜினிகாந்தும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனும், பிசிசிஐயின் செயலாளருமான ஜெய் ஷாவும் ஒன்றாக அமர்ந்து கிரிக்கெட் போட்டியை பார்த்தனர். இதுதொடர்பான போட்டோக்கள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அரசியலுடன் சிலர் ஒப்பிட தொடங்கி உள்ளனர்.
அதாவது ரஜினிகாந்த் தனிக்கட்சி அமைக்க முயன்றார். அதன்பிறகு அதனை அவர் கைவிட்டார். அதன்பிறகு அவர் பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக பழகி வருகிறார். சமீபத்தில் கூட ஜெயிலர் திரைப்படத்தை பார்க்க யோகி ஆதித்யநாத்துக்கு அழைப்பு விடுத்தார். மேலும் அவர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து காலில் விழுந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இத்தகயை சூழலில் தான் நடிகர் ரஜினிகாந்த் ஜெய்ஷாவுடன் சேர்ந்து இந்தியா-நியூசிலாந்து இடையேயான உலககோப்பை அரையிறுதி போட்டியை கண்டு ரசித்துள்ளதற்கும் சிலர் அரசியல் சாயம் பூச தொடங்கி உள்ளனர்.
ஆனால் உண்மை என்னவென்றால் இது எதார்த்தமாக நடந்ததாக கூறப்படுகிறது. அதாவது இந்தியாவில் பிசிசிஐ சார்பில் உலககோப்பை போட்டி நடந்து வரும் நிலையில் இந்தியாவில் புகழ்பெற்ற நடிகர்கள் உள்பட பல துறைகளில் முன்னணியில் உள்ள பிரபலங்களுக்கு கோல்டன் டிக்கெட் கொடுத்து போட்டியை காண ஜெய்ஷா அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் சென்ற நிலையில் அவரும் ஜெய்ஷாவும் அருகே அமர்ந்து போட்டியை ரசித்துள்ளனர்.