கேலோ இந்தியா நிகழ்ச்சியில் வீரமங்கை வேலு நாச்சியார் பற்றி பேசிய பிரதமர் மோடி...! அதிர்ந்த அரங்கம்...
வீரமங்கை வேலு நாச்சியார் இந்த விளையாட்டுப் போட்டியின் சின்னமாக உள்ளதாக கூறினார்.
சென்னையில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023-ன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்து கொண்டு போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளுக்கு அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் கூடியிருப்பவர்கள் இளைய இந்தியா மற்றும் புதிய இந்தியாவின் பிரதிநிதிகள் என்றும், விளையாட்டு உலகில் நாட்டை புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் ஆற்றல் படைத்தவர்கள் என்றும் அவர் கூறினார்.
நாடு முழுவதிலும் இருந்து சென்னைக்கு வந்துள்ள அனைத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களுக்கு தமது நல்வாழ்த்துக்களைப் பிரதமர் தெரிவித்தார். ”ஒரே பாரதம், உன்னத பாரதம்" என்ற உண்மையான உணர்வை நீங்கள் ஒன்றாக வெளிப்படுத்துகிறீர்கள் என்று அவர் குறிப்பிட்டார். வீரமங்கை வேலு நாச்சியார் இந்த விளையாட்டுப் போட்டியின் சின்னமாக உள்ளதாக கூறினார்.
2014-ம் ஆண்டுக்குப் பிறகு விளையாட்டுத் துறையில் இந்தியா அடைந்துள்ள வெற்றிகளை சுட்டிக்காட்டிய பிரதமர், டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த சாதனைகளை எடுத்துரைத்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைகள் படைக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.