அன்டார்டிகாவை உலுக்கும் பென்குயின் மரணங்கள்!! இது தான் காரணமா?
சர்வதேச அளவில் தற்போது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ள எச்5என்1 பறவைக்காய்ச்சல், பறவையினங்களை கொன்று குவித்து வருகிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், கடந்த மாதம் மட்டும் 532 பென்குயின்கள் இதனால் உயிரிழந்தது தெரியவந்தது.
H5N1 இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே அன்டார்டிகாவில் அதிகரித்து இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான பென்குயின் மரணங்களை அடுத்து அதன் பின்னணி குறித்து அறிய, அங்கிருந்து சேகரித்து வரப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பறவை காய்ச்சலால் பென்குயின்கள் மட்டுமல்லாது கடல் பறவைகள் போன்றவையும் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் அன்டார்டிக் ஆராய்ச்சியாளர்களின் கணக்கெடுப்பின்படி, ஆண்டுதோறும் சுமார் 20 மில்லியன் ஜோடி பென்குயின்கள் அன்டார்டிக் பகுதியில் இனப்பெருக்கம் செய்கின்றன. தற்போது பரவும் பறவைக்காய்ச்சல் பென்குயின் இனத்துக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அண்டார்டிக் தீபகற்பம் மற்றும் அருகிலுள்ள மூன்று தீவுகளில் பறவைக் காய்ச்சல் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பென்குயின் முட்டைகள் மற்றும் குஞ்சுகளை உண்ணும் ஸ்குவா கடற்பறவைகளில் இந்த பறவைக் காய்ச்சலில் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கனவே பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் வனவிலங்குகள், தற்போது வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.