"ஒரே நாடு, ஒரே தேர்தல்"..!! டிச.16ஆம் தேதி மக்களவையில் தாக்கலாகிறது மசோதா..?
"ஒரே நாடு, ஒரே தேர்தல்" மசோதா டிசம்பர் 16ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டமன்ற தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் 18,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது. மக்களவை, மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தேர்தல் முடிந்த அடுத்த 100 நாட்களில் நாடு முழுவதும் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஒரே வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அந்த குழு அளித்தது. இதை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த மசோதா டிச.16ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்றும் இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.