ஒரே நாடு ஒரே தேர்தல்..! திமுகவின் நிலைபாடு என்ன...? உயர்நிலைக் குழுவுக்கு எழுதிய கடிதம்...
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை எதிர்ப்பது ஏன்?’ என உயர்நிலைக் குழுவுக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக திமுக எழுதியுள்ள கடிதத்தில்; ஏற்கெனவே 23.12.2023 அன்று சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்த திமுகவின் கருத்துகளை கோரியது. இதற்கு திமுக தன்னுடைய 12.1.2023 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்குப் பிறகு நேரடி விசாரணைக்கு எவ்வித தகவலும் திமுகவுக்கு அனுப்பப்படவும் இல்லை. அந்த சட்ட ஆணையத்தின் கருத்துக் கேட்பு தொடர் நடவடிக்கையும் என்னவென்று தெரியவில்லை.
இதில் கவனிக்கதக்க முக்கிய அம்சம் என்னவென்றால், 2022-ல் சட்ட ஆணையம் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் , மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது சம்பந்தமாகத்தான் ஆலோசனைகளைக் கோரியது. ஆனால், தற்பொழுது மத்திய அரசு இதை விரிவுபடுத்தி நாடாளுமன்ற மற்றும் மாநில சட்ட சபைகளோடு, நகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளையும் இணைத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ஆய்வு வரம்புகளை வெளியிட்டுள்ளது. இந்தச் செயல் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவும், குடியரசு தலைவர் முறையிலான ஆட்சியை நோக்கியும் செல்வதாகும்.
மத்திய அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்ட குழு துவக்கத்திலிருந்தே சட்டவிரோதமானதும் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டதும் ஆகும். மேற்குறிப்பிட்ட உயர் மட்ட குழுவானது, அரசியலமைப்பு பிரிவு 73-ன் கீழ் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்ட நிர்வாக அதிகாரத்தின் மூலம் அமைக்கப்பட்டதாகும். மத்திய அரசின் நிர்வாக அதிகாரம் என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு உயர்வானது அல்ல. சட்டமியற்றும் அதிகாரம் உள்ளவற்றில் மட்டும்தான் நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க முடியும் என்று வகுத்துள்ள அரசியல் சட்டத்துக்கு விரோதமானதாகும் என்பதால் இந்த உயர் நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளதே செல்லாத ஒன்றாகும்.
மாநில அரசின் பட்டியலில் உள்ள நகராட்சிகள், பஞ்சாயத்துகளின் தேர்தல் நடைமுறை பற்றி விசாரிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள இந்த உயர்நிலைக் குழுவுக்கு அதிகாரமில்லை என்பது திமுகவின் திட்டவட்டமான கருத்தாகும். அது மட்டுமின்றி இந்த உயர்நிலைக்குழு சட்டவிரோதமானது. அரசியல் சட்டத்துக்கு புறம்பானது. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பின்வரும் காரணங்களினால் சாத்தியமற்றது என தெரிவித்துள்ளது.