’எதையும் அடமானம் வைக்க தேவையில்லை’..!! தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன்..!! இந்த திட்டம் பற்றி தெரியுமா..?
நாட்டில் இளைஞர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். இவர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து, கல்வி கற்பித்து, திறன் கொண்டவர்களாக மாற்றினால் ஒட்டுமொத்த நாட்டையும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியும். நாட்டில் முன்னெடுக்கப்படும் பெரும்பாலான திட்டங்கள் இளைஞர்களை மையப்படுத்தி தேச வளர்ச்சியை முன்னெடுப்பதாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் செய்யப்படுகிறது.
அந்த வகையில், இளைஞர்கள் தற்சார்பு பொருளாதாரத்துடன் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்கிக் கொள்ளும் வகையில் மத்திய அரசு சார்பில் கடனுதவி வழங்கப்படுகிறது. பிரதம மந்திரி முத்ரா கடன் திட்டம் என்ற பெயரில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
அடமானம் தேவையில்லை :
நீங்கள் வீட்டுக் கடன், தங்க நகைக் கடன் அல்லது வாகன கடன் போன்ற கடன்களை பெறும்போது அசையும், அசையா சொத்துக்களை நீங்கள் அடமானமாக வைக்க வேண்டியிருக்கும் அல்லது வங்கியில் ஏதேனும் சொத்தை அடமானமாக நீங்கள் காட்ட வேண்டும். ஆனால், முத்ரா கடன் திட்டத்திற்கு அதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்தவித அடமானமும் காட்டாமல் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் கடன்பெறலாம்.
எப்படி விண்ணப்பிப்பது..?
இதற்கு நீங்கள் தேசிய மயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் அல்லது தனியார் வங்கிகள் அல்லது சிறு நிதியுதவி வங்கிகள் போன்றவற்றை அணுகலாம். நீங்கள் செய்யும் தொழில் பொறுத்து உங்களுக்கான கடன் தொகை நிர்ணயம் செய்யப்படும். சிஷு கடன் என்ற பெயரில் ரூ.50,000 வரையிலும், கிஷோர் கடன் என்ற பெயரில் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் கடன் என்ற பெயரில் ரூ.10 லட்சம் வரையிலும் கடன் பெறலாம்.
தகுதி :
தொழில் செய்ய விரும்புவோர் முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். ஏற்கனவே செய்கின்ற தொழிலுக்கும் கடன் பெற முடியும். கடன் விண்ணப்பம் செய்யும் நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். வங்கிக் கணக்கு உடையவராகவும் இருக்க வேண்டும். உங்கள் வணிகமானது கார்ப்பரேட் தொழிலாக அமையக் கூடாது. இந்தக் கடனுக்கு பரிசீலனைக் கட்டணம் எதுவும் கிடையாது. 12 மாதங்கள் தொடங்கி 5 ஆண்டுகள் வரையிலான காலவரம்பில் கடனை திருப்பிச் செலுத்தலாம்.