இதுவரை யாரும் செய்யவில்லை...! கடந்த 3 ஆண்டுகளில் 3-வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார் நிதிஷ் குமார்...!
கடந்த மூன்று ஆண்டுகளில் 2 முறை பதவியை ராஜினாமா செய்து தற்பொழுது 3-வது முறையாக பீகார் முதலமைச்சராக நிதீஷ் குமார் பதவி ஏற்று கொண்டார்
கடந்த 2020-ம் ஆண்டு பிஹாரில் நடந்த சட்டபேரவைதேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்றார் நிதீஷ் குமார். அதன் பிறகு பாஜகவுடன் கருத்து முரண்பாட்டால், 2022-ல் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணியில் இணைந்து பிஹாரில் புதிய ஆட்சியை அமைத்தார். தற்போது மெகா கூட்டணியில் இருந்து விலகி, பாஜகவுடன் இணைந்து முதல்வராகி உள்ளார்.
நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்த பதவி ஏற்பு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா, ஜிதன் ராம் மஞ்சி, சிராக் பாஸ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிதிஷ் குமாருடன் 8 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களில் 3 பேர் பாஜகவையும், 3 பேர் ஐக்கிய ஜனதா தளத்தையும், ஒருவர் ஹிந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா(மதச்சார்பின்மை) கட்சியையும் சேர்ந்தவர்கள். ஒருவர் சுயேட்சை எம்எல்ஏ. கடந்த மூன்று ஆண்டுகளில் 2 முறை பதவியை ராஜினாமா செய்து தற்பொழுது 3-வது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்று கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதிஷ் குமார் அனைவரையும் ஏமாற்றி விட்டார். முதலமைச்சராக நீடிப்பதும், பாஜகவுடன் இணைந்து செயல்படுவதும்தான் அவரது நோக்கமாக இருந்தால், அதனை அவர் முன்னரே செய்திருக்கலாம். ஆனால் அவர் 'இந்தியா' கூட்டணிக்கு வந்ததற்கான நோக்கம், அவர் பாஜகவுடன் கருத்தியல் ரீதியாக உடன்படவில்லை என்பதும், பொது நலனுக்காகவும்தான். இவையெல்லாம் விட தற்போது அவரது சொந்த நலன்கள் முதன்மையானது தெரிகிறது என காங்கிரஸ் தலைவர் TS சிங் தியோ கண்டனம் தெரிவித்துள்ளார்.