2019ல் அடிக்கல் நாட்டிய மோடி!! 2024ல் கிடைத்த அனுமதி!! விரைவில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி!!
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக் கட்டுமானப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்க மாநில சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு இந்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்து, 2019 ஜனவரியில் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது. ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனமான ஜெய்காவுடன் கடனுக்கான ஒப்பந்தம் 2021 மார்ச்சில் கையெழுத்தானது. மொத்த நிதித் தேவையான ரூ.1977.8 கோடிகளில் 82% சதவீத தொகையான ரூ1627.70 கோடிகளை ஜெய்கா நிறுவனம் மூலம் கடனாக பெறப்படும் எனவும், மீதமுள்ள 18% தொகையை மத்திய அரசு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுற்றுச்சுவர் மட்டும் கட்டப்பட்டு ஐந்து ஆண்டுகளாக வேறெந்த கட்டுமான பணிகளும் நடைபெறாமல் இருந்த நிலையில், கடந்த 17 ஆகஸ்ட் 2023 அன்று மருத்துவமனை கட்டுமானத்திற்கான டெண்டர் அறிவிப்பை எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டது. ஜெய்கா நிறுவனத்திடமிருந்து கடன் தொகை வரப்பெற்றுள்ளதாகவும், அதனால் 33 மாதங்களில் விரைந்து கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டது. இதனை தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறையின் ஒப்புதலுக்கு பின்னர் இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான L&T Construction என்ற நிறுவனத்திற்கு டெண்டர் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 2024 மார்ச் 14 அன்று கட்டுமான பணிகளை தொடங்கியது L&T நிறுவனம். கட்டுமான பணிகள் மேற்கொள்வதற்கான சுற்றுச்சூழல் அனுமதியே இன்னும் பெறவில்லை என்ற தகவல் வெளியானது. முன் கட்டுமான (Pre construction) பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருவதாக எய்ம்ஸ் நிர்வாகம் விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் மே 2ம் தேதி எய்ம்ஸ் கட்டுமானத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையை எய்ம்ஸ் நிர்வாகம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையிடம் சமர்ப்பித்திருந்தது. இதனடிப்படையில் மே 10ம் தேதி இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கலாம் என சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது.
இதனை தொடர்ந்யது இன்று எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. எனவே மிக விரைவில் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கும் என எய்ம்ஸ் நிர்வாகம் தகவல் வெளியாகியுள்ளது.
Read More: ‘குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்..’ இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!