Election Bond: லாட்டரி மார்டினின் நிறுவனம் தேர்தல் பத்திரம் மூலம் ரூ.1,368 கோடி நன்கொடை...!
லாட்டரி' மார்டினின் நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக அதிகபட்சமாக ரூ.1,368 கோடி நன்கொடை கொடுத்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு மீண்டும் வரவுள்ள நிலையில் இந்த பட்டியல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில், ஏப்ரல் 12, 2019 முதல் ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆகிய மூன்று மதிப்புள்ள பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
லாட்டரி கிங்’ என அழைக்கப்படும் சாண்டியாகோ மார்டினின் ஃபியூச்சர் கேமிங், ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம், தேர்தல் பத்திரங்கள் மூலமாக அதிகபட்சமாக ரூ.1,368 கோடி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. பணமோசடி வழக்கில் மார்டின் தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. சாண்டியாகோ மார்டின் மற்றும் அவரது மகன் ஜோஸ் சார்லஸ் மார்டின் தற்போது பாஜகவில் உள்ளனர்.