வலி நிவாரணி மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொள்கிறீர்களா.? மருத்துவர்களின் எச்சரிக்கை.!?
பொதுவாக நம் உடலில் ஏற்படும் தலைவலி, கால் வலி, உடல் வலி போன்ற பல்வேறு வலிகளுக்கும் வலி நிவாரணி மாத்திரைகளான பாரசிட்டமால், டோலா 650, ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை மருத்துவரின் அறிவுரை இல்லாமல் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இது உடலுக்கு மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள், அளவுக்கு அதிகமான வலி நிவாரணி மாத்திரையை எடுத்துக் கொண்டால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம், சிறுநீரக கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது. எடின்பரோ பல்கலைக்கழகம் பல மாதங்களாக தொடர்ந்து நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் அதிர்ச்சிகரமான முடிவுகள் தெரியவந்துள்ளன.
அதாவது, உடலில் ஏற்படும் வலி, காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு வலி நிவாரணிகளை பயன்படுத்துவது பாதுகாப்பானது தான். ஆனால் அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை உபயோகப்படுத்தும் போது உடலில் உள்ள உறுப்புகள் செயலிழக்க தொடங்குகின்றன. மேலும் அதிக மாத்திரை உபயோகிக்கும் போது மாத்திரையின் தன்மை உடலில் வேலை செய்யாமல் போகிறது என்றும் கூறியுள்ளனர்.
மேலும் அல்சர், வயிற்றுப்புண், நெஞ்செரிச்சல் எனத் தொடங்கி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள் பாதிக்கிறது. எனவே மருத்துவர்களுமே நோயாளிகளுக்கு நீண்ட நாட்கள் வலி நிவாரண மாத்திரைகளை பரிந்துரைக்கக் கூடாது என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.