#just in: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்…!
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக உருவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் குறைந்ததால், இது புயலாக வலுபெறாது என வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்திருந்த நிலையில் இன்று புயலை உருவாகும் என அறிவிப்பை மாற்றியது.
இதனையடுத்து இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரு சில மணி நேரத்தில் புயலாக உருவாகக்கூடும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில் வங்கக்கடலில் தற்போது ஃபெங்கல் புயல் உருவாகியுள்ளது. இந்த ஃபெங்கல் புயல் பிற்பகல் 2.30 மணியளவில் உருவானதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் ஆனது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை (நவ.30) பிற்பகலில் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என ஏற்கனவே கூறப்பட்டிருந்தது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். மேலும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (நவ.29) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும்.
அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சை, திருவாரூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (நவ.30) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.
அதேபோல் ராணிப்பேட்டை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.