போர் ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்!. வெளியேறும் மக்களை தடுக்கவே திட்டம்!. குற்றம்சாட்டும் ஈரான்!
Israel attack: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் மீண்டும் லெபனான் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்த தயாராக இருந்ததாகக் கூறி இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிராக லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினர். அவர்களை மீண்டும் அவர்களுடைய இடத்தில் குடியமர்த்துவதுதான் நோக்கம் என இஸ்ரேல் அறிவித்துக் கடந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தியது.
தரைவழி தாக்குதலையும் தொடங்கியது. மொத்தமாக ஹிஸ்புல்லாவினரின் பேஜர் கருவிகளை வெடிக்கச் செய்தது, லெபனான் தலைநகர் பெய்ரூட் மீதான தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை கொன்றது என இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது. இதனால் லெபனான் மக்களும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்தனர்.
3,800க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் இந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். இதற்கிடையே இஸ்ரேல்- லெபனான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐ.நா. முயற்சி மேற்கொண்டன. இதன்படி ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேல் இடையே கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த நவம்பர் 27 முதல் அமலுக்கு வந்தது.
இதை ஹிஸ்புல்லாவின் தற்போதைய தலைவர் நைம் காசிம் வெற்றியாக வர்ணித்தார். இஸ்ரேல்- ஹிஸ்புல்லா போர் நிறுத்தம் நமக்கு கிடைத்த மாபெரும் வெற்றி, நாம் அவர்களை தடுத்ததால் நாம் பாதுகாப்பாக உள்ளோம், இது நமது எதிரி ஹிஸ்புல்லாவை அழிப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஹிஸ்புல்லா பலவீனமாகிவிட்டது என்று நினைப்பவர்கள் தோற்றுவிட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் மீண்டும் லெபனான் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்த தயாராக இருந்ததாகக் கூறி இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஆனால் தாங்கள் எந்த தாக்குதலுக்கும் தயாராக வில்லை என ஹிஸ்புல்லா மறுத்துள்ளது.
போர் காரணமாக வெளியேறிய லெபனானியர்கள் மீண்டும் தங்கள் பகுதிக்கு திரும்பி வருகிறார்கள். அவர்களைத் தடுக்கும் வகையிலேயே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஒப்பந்தத்தின்படி 60 நாட்களுக்குப் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. லிட்டானி ஆற்றின் வடக்க்குப் பகுதிக்கு ஹிஸ்புல்லா அமைப்பினர் பின்வாங்க வேண்டும். இஸ்ரேல் படை தனது எல்லைக்குத் திரும்ப வேண்டும்.
Readmore: இன்று உலக எய்ட்ஸ் தினம்!. எச்.ஐ.வி.தொற்றில்லா நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்!.