இப்படியொரு சோதனையா?…13 ரன்களில் சுருட்ட வேண்டிய கட்டாயத்தில் பாக்!… அரையிறுதிக்கு போவது யார்?
இந்தியாவில் நடைபெற்று வரும் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அரை இறுதியில் எந்தெந்த அணிகள் தகுதி பெற்று மோதிக் கொள்ளும் என்று 99 சதவீதம் தெரிந்து இருக்கிறது. மீதமுள்ள 1 சதவீதத்தில் இருப்பது பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்புதான்.
தற்போது அரையிறுதிக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என நான்கு அணிகள் தகுதிப்பெற்று இருக்கிறது. வரிசைப்படியே புள்ளி பட்டியலில் இந்த நான்கு அணிகளும் இடம் பிடித்திருக்கின்றன. புள்ளி பட்டியலில் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்துள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் முதல் மற்றும் நான்காம் இடம் பிடித்துள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் வரும் 15ம் தேதி மோதுகின்றன. கடந்த உலகக்கோப்பையிலும் அரைஇறுதியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திற்கு பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை வென்று முன்னேறி வர வேண்டுமென்றால், அதற்கான ரன் ரேட் கணக்கு மலைக்க வைப்பதாக இருக்கிறது. அதாவது, இன்று நவம்பர் 11ம் தேதி பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. அந்தவகையில், பாகிஸ்தான் இங்கிலாந்து அணியை வென்று நியூசிலாந்து அணியை விட நல்ல ரன் ரேட் பெற்று பாகிஸ்தான் அரையிறுதிக்கு வர வேண்டும் என்றால், இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யக்கூடாது.
இதற்கு அடுத்து பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 300 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து அணியை 13 ரன்களில் சுருட்ட வேண்டும். 350 ரன்கள் என்றால் 63 ரன்களிலும், 400 ரன்கள் என்றால் 112 ரன்களிலும், 450 ரன்கள் என்றால் 162 ரன்களிலும், 500 ரன்கள் என்றால் 211 ரன்களிலும் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் சுருட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.