"ராகுல், மல்லிகார்ஜுனா கார்கே இந்தியா கூட்டணி பூசலுக்கு முக்கிய காரணமா..?" மௌனம் கலைத்த ஐக்கிய ஜனதா தள தலைவர் கே.சி தியாகி .!
வர இருக்கின்ற 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் தலைமையில் திமுக திரிணாமுல் காங்கிரஸ் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஐக்கிய ஜனதா தளம் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல முன்னணி கட்சிகள் இணைந்து இந்தியா என்ற வலுவான கூட்டணியை கட்டமைத்தது. இந்தக் கூட்டணி தொகுதி பங்கீடு பிரதமர் வேட்பாளர் போன்றவை தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்நிலையில் இந்தியா கூட்டணியில் திடீரென பிளவு ஏற்பட்டிருக்கிறது. மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனாலும் இந்தியா கூட்டணியில் தொடர்வோம் என அவர்கள் தெரிவித்திருந்தனர்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாரத் ஜோதா யாத்ரா என்ற பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தற்போது மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கி மும்பை வரை யாத்திரை மேற்கொண்டு வருகிறார் . இந்தப் பயணம் மேற்கு வங்காளம் பீகார் மேகாலயா அருணாச்சலப் பிரதேஷ் உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெற இருக்கிறது . இந்த யாத்திரை தங்கள் மாநிலங்களுக்கு வருவதை மம்தா பானர்ஜி மற்றும் நிதீஷ் குமார் போன்ற கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. எனினும் ராகுல் காந்தி இந்த யாத்திரையை தீவிரமாக மேற்கொள்வதும் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியுடன் கூட்டணி ஆட்சியில் இருந்த நிதீஷ் குமார் ஆட்சியை கலைத்துவிட்டு பிஜேபியுடன் சேர்ந்து புதிய அரசு அமைக்க இருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.மேலும் இந்தியா கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் முன்னணி வெளியேறுவதாகவும் நித்திஷ் குமார் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியா கூட்டணியில் நடைபெறும் அத்தனை பிரச்சினைகளுக்கும் காங்கிரஸ்தான் காரணம் என ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவர் கே.சி தியாகி குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் இந்தியா கூட்டணியை துண்டு துண்டாக உடைப்பதற்கு காங்கிரஸ் முயற்சி செய்து வருவதாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசுவையில் பிரதமர் வேட்பாளரை முன் மொழியாமல் கூட்டணியை தொடரலாம் என மற்ற கட்சிகள் தெரிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுனா கார்கேவை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததோடு தொகுதி பங்கீடு குறித்து இழுபறி செய்ததாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் வலிமை மிக்க பாரதிய ஜனதா கூட்டணியை வீழ்த்துவதற்கு இந்தியக் கூட்டணியிடம் எந்தவிதமான திட்டங்களும் இல்லாமல் திணறி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.