'This Moment' கிராமி விருதை தட்டி தூக்கிய இந்திய இசை குழு..!! சங்கர் மகாதேவன் பெருமிதம்.!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 66 ஆவது கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. சர்வதேச அரங்கில் இசை கலைஞர்களுக்கான உயரிய விருதாக அறியப்படும் கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சியில், உலக அளவில் ஏராளமான இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
2022ஆம் வருடம் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 2023ஆம் வருடம் செப்டம்பர் 15ஆம் தேதி வரை வெளியான இசை ஆல்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, வாக்கெடுப்பின் அடிப்படையில் சிறந்த ஆல்பங்களுக்காக கிராமி விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழாவில், இந்தியாவைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் உருவாக்கிய 'திஸ் மொமண்ட்' என்ற என்ற பாடல் குளோபல் சிறந்த இசை ஆல்பத்திற்கான விருதை தட்டிச் சென்றுள்ளது.
இந்தப் பாடலை இந்தியாவைச் சேர்ந்த இசை கலைஞர்கள் 'ஷக்தி' என்ற பெயரில் இசைக் குழுவாக இணைந்து உருவாக்கியுள்ளனர் . இந்த இசை குழுவில் பாடகர் சங்கர் மகாதேவன், தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேன், இசையமைப்பாளர் செல்வ கணேஷ், கிதார் கலைஞர் ஜான் மெக்லாக்லின், வயலின் கலைஞர் கணேஷ் ராஜகோபாலான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருது வென்ற பின் பேசிய இசையமைப்பாளர் மற்றும் பாடகர் சங்கர் மகாதேவன் "கடைசியாக இந்தியா இந்த விருதை வென்று விட்டது. இந்த நேரத்தில் இந்திய மக்கள், கடவுள் மற்றும் எனது மனைவிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டு இருக்கிறார்.