இடைவிடாத கனமழை!… இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?
தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (புதன்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழ்நாடு, புதுச்சேரியில் 20ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று அதி கனமழை எனப்படும் 25 சென்டி மீட்டருக்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிக கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை காரணமாக தமிழகத்தில் சென்னை (பள்ளிகளுக்கு மட்டும்) மற்றும் திருவள்ளுர் (பள்ளி & கல்லூரி) மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவம்பர் 15) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.