கனமழை எதிரொலி...! இன்று எந்தெந்த மாவட்டத்தில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை...?
கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று நெல்லை, தென்காசி, விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவுகிறது. மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுகுறைந்து, தென்தமிழகப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவக்கூடும்.
இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
அந்தமான் அருகே வரும் 15-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வரும் 16-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 17-ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக இன்று நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல விழுப்புரம், தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.