அடுத்த 24 மணி நேரத்தில்..!! உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி..!! கனமழை எச்சரிக்கை..!!
அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்து வளைகுடாவில் உள்ள சூறாவளி சுழற்சி இப்போது தெற்கு அந்தமான் கடல் மீது உள்ளதாகவும் இது தென்மேற்கு நோக்கி சாய்ந்து மத்திய வெப்பமண்டல நிலைகள் வரை நீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16ஆம் தேதி மத்திய மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் இருந்து வடகிழக்கு காற்று தென்கிழக்கு தீபகற்ப இந்தியாவின் மீது நிலவுகிறது. இதனால், நாளை முதல் 16ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் ஆந்திரா, ஏனாம், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் அகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்றும் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கேரளா மற்றும் மாஹே ஆகிய இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 7 நாட்களில் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13, 14 ஆகிய தேதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழையும், நவம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.