ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்கிக்கொண்டு இதை செய்யுங்கள்- விஜய் ஆண்டனி அட்வைஸ்
அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் தருவதை, வறுமை சூழ்நிலை கருதி வாங்கி கொள்ளலாம் என்றும், அதே நேரத்தில் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
40 க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய விஜய் ஆண்டனி "நான்" திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தற்போது விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்துள்ள ‘ரோமியோ‘ திரைப்படம் வரும் 11ம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில் இப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.
அப்போது பேசிய விஜய் ஆண்டனி, குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இந்த படத்தை உருவாகி உள்ளதாக குறிப்பிட்டார். குறிப்பாக மனைவிகள் பார்க்க வேண்டிய படம் என தெரிவித்த அவர், ஒவ்வொரு கணவனும் மனைவியை இந்த படத்திற்கு அழைத்து வர வேண்டும் என்றார். ரோமியோ திரைப்படம் காதல் குறித்து விளக்குவதாகவும், திருமணத்திற்குப் பிறகு கணவன் - மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் படம் கூறுவதாகவும் தெரிவித்தார்.
நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கு தங்களின் ஆதரவு குறித்த செய்தியாளர் கேள்விக்கு, நான் அனைத்து கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். தற்போது அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் வழங்குவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “ஓட்டுக்கு பணம் வழங்குவது, பெறுவது தவறாக இருந்தாலும், வறுமை, சூழ்நிலை கருதி ஓட்டுக்கு வழங்கப்படும் பணத்தை வாங்கி கொள்ளலாம்” என்றார். ஆனால் பணம் பெற்றதால் அந்த கட்சிக்குதான் ஓட்டு என்பதை முடிவு செய்யாமல், நல்லவர்களுக்கு வாக்களிக்கலாம் எனவும் தெரிவித்தார்.