பூஜை அறையில் பயன்படுத்தும் மங்களகரமான குங்குமத்தை வீட்டிலேயே செய்யலாம்.! எப்படி தெரியுமா.!?
நம் தினசரி வாழ்வில் கோவிலிலும், வீட்டின் பூஜை அறையிலும் பயன்படுத்தும் மங்களகரமான பொருள் தான் இந்த குங்குமம். திருமணமான பெண்கள் குங்குமத்தை நெற்றியில் வைப்பதை பலரும் பார்த்திருப்போம். இவ்வாறு வைப்பது தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக தான் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கடைகளில் வாங்கும் குங்குமம் ஒரு சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். இப்படிப்பட்டவர்கள் வீட்டிலேயே குங்குமத்தை தயாரித்து பயன்படுத்திக் கொள்ளலாம். வீட்டிலேயே இந்த மங்களகரமான குங்குமம் எப்படி செய்யலாம் என்பதை குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: மஞ்சள் கிழங்கு, வெங்காரம், படிகாரம், எலுமிச்சை பழச்சாறு, நல்லெண்ணெய், சிறு துளி வாசனை திரவியம்
செய்முறை: முதலில் மஞ்சள் கிழங்கை காய வைத்து நன்கு பொடியாக அரைத்து சல்லடையில் சலித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு வெங்காரம், படிகாரம் இரண்டையும் தனித்தனியாக அரைத்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு எலுமிச்சை சாற்றில் வெங்காரம், படிகாரம், மஞ்சள் கிழங்கு போன்றவற்றை அரைத்து வைத்த கலவையை உதிரி உதிரியாக கலந்து விட வேண்டும்.
இவ்வாறு கலந்து விட்ட பிறகு இந்த கலவையை நிழலில் போட்டு காற்றோட்டமாக காயவைக்க வேண்டும். ஈரப்பதம் இல்லாமல் நன்கு உலர்ந்த பின் நல்லெண்ணெய் மற்றும் வாசனை திரவியங்கள் ஊற்றி கலந்து விட்டு மேலும் காய வைத்து எடுத்தால் வீட்டிலேயே கெமிக்கல்ஸ் சேர்க்காத குங்குமம் தயார்.