குழந்தைகள் வரப்போகும் தேர்வுகளை நினைத்து பயப்படுகிறார்களா.! இந்த டிப்ஸ் பாலோவ் பண்ணுங்க போதும்.!?
பண்டிகைகால விடுமுறைகள் எல்லாம் முடிந்து இன்னும் ஒரு சில மாதங்களில் குழந்தைகளுக்கு பள்ளிகளில் தேர்வுகள் வந்துவிடும். குழந்தைகள் நன்றாக படித்து நிறைய மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் கனவாக இருந்து வந்தாலும், குழந்தைகளுக்கு வரப்போகும் தேர்வுகளை குறித்து ஒரு வித பயம் இருந்து வரும்.
அப்படியான நேரத்தில் என்னதான் நன்றாக படித்தாலும் பரீட்சை எழுத போகும் சமயத்தில் பயத்தின் காரணமாக எல்லாம் மறந்து விடும். எனவே இந்த தேர்வு நேரங்களில் குழந்தைகளுக்கு எப்படி உறுதுணையாக இருக்கலாம் என்பது குறித்து பெற்றோர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
முதலில் உங்கள் குழந்தை படிக்கும் விதத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது வாய்விட்டு சத்தமாக படிக்கிறார்களா அல்லது மனதுக்குள்ளயே அமைதியாக படிக்கிறார்களா, எழுதி படிக்கிறார்களா என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் ஊக்கப்படுத்த வேண்டும். மேலும் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு படிப்பதற்கான அட்டவணையை குழந்தைகளுடன் சேர்ந்து தயார் பண்ண வேண்டும்.
முக்கியமாக படிக்கும் குழந்தைகளை மற்றொரு குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது. தேர்வு நேரங்களில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை மட்டுமே சமைத்து தர வேண்டும். குழந்தைகளை முழு நேரமும் படிக்க சொல்லி கட்டாயப்படுத்தாமல் சிறிது இடைவேளை விட்டு படிக்க வைக்க வேண்டும். எப்பொழுதும் படிப்பைப் பற்றியே பேசி அறிவுரை கூறிக்கொண்டிருக்காமல் சிறிது அவர்கள் கவனத்தை திசை திருப்பி ரிலாக்ஸாக இருக்க வைத்துவிட்டு பின்பு படிக்க வைக்கலாம்.
இதற்கு முன்பான தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களின் தன்னம்பிக்கை பாதிக்கப்படும். எப்போதும் மதிப்பெண்கள் அதிகமாக எடுக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்காமல் குறைவான மதிப்பெண்கள் எடுத்தாலும் பரவாயில்லை என்று தைரியம் சொல்லுங்கள். இவ்வாறு கூறுவது அவர்களின் தன்னம்பிக்கையை வளர்க்கும். இது போன்ற செயல்களின் மூலம் தேர்வு என்றதும் பயப்படும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தன்னம்பிக்கை அளிக்கலாம்.