இந்தநாளுக்காக எத்தனை விபத்து!… எவ்வளவு உயிர் தியாகம்!… சிவகாசி பட்டாசின் வரலாறு தெரியுமா?
இந்தியா முழுவதும் பரவலாக பெரும்பாலான மக்களால் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகை, தீபாவளி. தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு, பட்டாசு தான் பிரதானம். இதில் இன்று பெரும் பேசுபொருளாக உள்ளது பட்டாசு. சுற்றுசூழல் பாதிப்பு, சீன இறக்குமதி, உள்ளூர் உற்பத்தியாளர்கள் பாதிப்பு என பல்வேறு தியாகங்களை கொண்டுள்ள பட்டாசின் வரலாறு சுவாரசியம் நிறைந்தது. பட்டாசு என்றாலே சிவகாசி தான், இந்தியாவின் பட்டாசு உற்பத்தியில் 90 சதவீத பட்டாசுகள் சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
பட்டாசு சார்ந்த தீப்பெட்டி தொழில், அச்சு தொழிலும் நடந்து வருகிறது. அதனால் தான் மறைந்த பாரத பிரதமர் சிவகாசியை குட்டி ஜப்பான் என குறிப்பிட்டார். சுமார் 65 ஆண்டுகளுக்கு முன்பு சிவகாசி இப்போது இருக்கும் போல் தொழில் நகரம் அல்ல. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 1905 ம் ஆண்டு பழனியப்ப நாடார் நாகம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் அய்யநாடார். 1922 ம் ஆண்டு சிவகாசியில் வேலை இல்லாத காரணத்தால் அவரது நண்பர் சண்முகத்தோடு சேர்ந்து கொல்கத்தா சென்று அங்குள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணிபுரிய தொடங்கினர்.
சில காலம் அங்கு தங்கி தீப்பெட்டி தயாரிக்க கற்றுக்கொண்டு சிவகாசி திரும்பி வந்து அங்கு முதல் முறையாக தீப்பெட்டி தொழிற்சாலையை தொடங்கினார்கள். சிவகாசி பொதுவாக வெயில் அதிகம் காணப்படும் பகுதி என்பதால் அது இன்னும் அதற்கு சாதகமாக அமைந்தது. தீப்பெட்டியை தொடர்ந்து பட்டாசும் சிவகாசிக்கு வர பட்டாசு மற்றும் தீப்பெட்டிகளுக்கு ஸ்டிக்கர் வெளியில் இருந்து வாங்கப்பட்டு வந்தது, பின்னர் நாளடைவில் அதற்காக அச்சகங்களும் சிவகாமிக்கு வந்தன.
இப்படி தான் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில் சிவகாசிக்கு வந்தது.1960 க்கு பின்னர் அய்யநாடார் சண்முகம் வசம் இருந்த இந்த தொழில் வளர்ச்சி பெற்று சிவகாசி எங்கும் பரவியது. தற்போது சிவகாசி, சாத்தூர், விருதுநகர் இந்த மூன்று ஊர்களில் உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் தான் சிவகாசி பட்டாசு என்ற பெயரில் இந்தியா முழுவதும் சந்தை படுத்தப்பட்டு வருகிறது. இதே போல தீப்பெட்டி உற்பத்தியிலும் 80 சதவிகித தேவையை விருதுநகர் மாவட்டம் தான் பூர்த்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.