மின்சார வாகனங்களுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு...!
மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்கும், நாட்டில் மின்னேற்று நிலையங்கள் கிடைத்தல், அணுகல் உட்பட மின்சார வாகனத்தை ஏற்றுக்கொள்வதில் உள்ள பல்வேறு சவால்களை எதிர்கொள்ளவும் கனரக தொழில்கள் அமைச்சகம் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. மேம்பட்ட வேதியியல் கலத்திற்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம், 12 மே, 2021 அன்று அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு ரூ.18,100 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கு அரசு ஒப்புதல் அளித்தது. வாகன மேம்பாட்டில் பிரதமரின் மின்சார வாகனப் புரட்சி திட்டம் ரூ.10,900 கோடி செலவில் 29 செப்டம்பர், 2024 அன்று அறிவிக்கப்பட்டது. இது மின்சார பேருந்துகள், ஆம்புலன்ஸ்கள், மின்சார வாகன பொது சார்ஜிங் நிலையங்கள் மற்றும் வாகன சோதனை முகமைகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட இரண்டு ஆண்டு திட்டமாகும்.
மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்புக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் தரநிலைகளை மின்சார அமைச்சகம் செப்டம்பர் 17, 2024 அன்று "மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றும் உள்கட்டமைப்பை நிறுவுதல் மற்றும் இயக்குவதற்கான வழிகாட்டுதல்கள்-2024" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் நாட்டில் இணைக்கப்பட்ட மற்றும் ஒன்றோடொன்று இயங்கக்கூடிய மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றும் உள்கட்டமைப்பு வலையமைப்பை உருவாக்குவதற்கான தரநிலைகள் மற்றும் நெறிமுறைகளை கோடிட்டுக் காட்டுகின்றன. இந்த வழிகாட்டுதல்கள் மின்சார வாகனங்களுக்கு மின்னேற்றும் நிலையங்களுக்கான மின்சார இணைப்புகளையும் எளிதாக்குகின்றன. மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு பச்சை உரிமத் தகடுகள் வழங்கப்படும் என்றும், அனுமதித் தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது. மின்சார வாகனங்களுக்கான சாலை வரியை தள்ளுபடி செய்ய மாநிலங்களுக்கு அறிவுறுத்தும் அறிவிப்பையும் இந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது, இது மின்சார வாகனங்களின் ஆரம்பகால செலவைக் குறைக்க உதவும். தனியார் மற்றும் வணிக கட்டிடங்களில் மின்னேற்றும் நிலையங்களை சேர்ப்பதைக் கட்டாயமாக்கும் மாதிரி கட்டிட துணை விதிகளில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது .