சென்னையில் வெள்ள பாதிப்பு...! சுமார் 15,000 பேர் பாதுகாப்பான வகையில் மீட்பு...!
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 15,000 பேர் பாதுகாப்பான வகையில் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்!அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவைகளை அரசு கொடுத்து வருகிறது, இதுவரை 4 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது என தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
மிக்ஜம்’ புயல்’ வடமேற்கு திசையில் நகா்ந்து திங்கள்கிழமை காலை 8.30 மணியளவில் மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல், தெற்கு ஆந்திரம்- வடதமிழக கடலோரப் பகுதிகளில் வலுப்பெற்று ‘தீவிர புயலாக’ சென்னைக்கு கிழக்கு-வடகிழக்கே சுமாா் 90 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது. அது தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளையொட்டி வடக்கு திசையில் நகா்ந்து இன்று காலை தெற்கு ஆந்திர கடற்கரையையொட்டிய நெல்லூா்- மசூலிப்பட்டினம் இடையே பாபட்லா என்ற இடத்துக்கு அருகே தீவிரப் புயலாக கரையைக் கடக்கக்கூடும்.
அந்த சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ. முதல் 110 கி.மீ. வேகத்தில் இருக்கும். இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, திருவள்ளூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.