IPL 2024: சென்னையில் முதல் லீக் போட்டி!… தோனி தரிசனத்துக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!
ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரும் இந்தியாவிலேயே முழுமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால், ஐபிஎல் தொடருக்கான அட்டவணையை தயாரிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் ஐபிஎல் அட்டவணையை வெளியிடுவதில் பிசிசிஐ தாமதம் செய்து வந்தது.
இருப்பினும் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டு, மே 26ஆம் தேதி இறுதிப் போட்டியை நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரின் முதல் 15 நாட்களுக்கான அட்டவணையை மட்டும் முதற்கட்டமாக வெளியிட உள்ளதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது முதல் 15 நாட்கள் நடக்கும் போட்டிகள், போட்டிகள் நடக்கும் நேரம் மற்றும் மைதானங்கள் ஆகியவை மட்டும் முதற்கட்டமாக அறிவிக்கப்படவுள்ளது. ஏனென்றால் ஐபிஎல் அட்டவணை வெளியிடப்படாததால், அனைத்து அணிகளும் வீரர்களுக்கான பயிற்சி முகாமை ஒருங்கிணைப்பதில் குழப்பத்தில் உள்ளனர். அதேபோல் சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் அந்தந்த நாட்டு நிர்வாகிகளிடம் இருந்து என்ஓசி வாங்குவதிலும் சிக்கலை சந்தித்து வருகின்றனர்.
இந்தநிலையில், முதல் 15 நாட்களுக்கான அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிடவுள்ளது. அதன்படி கடந்த சீசனில் இறுதிப்போட்டியில் விளையாடிய சென்னை - குஜராத் அணிகள் முதல் போட்டியில் விளையாடவுள்ளன. சாம்பியன் கோப்பையை சென்னை அணி கைப்பற்றியதால், முதல் போட்டியே சேப்பாக்கம் மைதானத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், ஐபிஎல் தொடருக்கான தொடக்க விழாவையும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2009ஆம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற போது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. அதன்பின் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது ஒரு பாதி ஆட்டங்கள் ஐக்கிர அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது, முழுக்க முழுக்க இந்தியாவிலேயே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
English summary:First league match in Chennai
Readmore:முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் விளையாடும் 5 வீரர்கள்!… யார் யார் தெரியுமா?