இன்று தைப்பூசம்.. கேட்டதை கொடுத்தருள முருகனுக்கு எப்படி விரதம் இருந்து வழிபடலாம்.!?
பொதுவாக தை மாதம் என்பது தெய்வ பக்தி நிறைந்த மாதமாக கருதப்படுகிறது. பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் கூடிவரும் நாளையே தைப்பூசமாக கொண்டாடுகிறோம். தைப்பூசம் தினத்தில்தான் இந்த உலகம் தோன்றியதாகவும், இந்நாளை முருகனுக்கு உகந்த நாளாகவும் நம் முன்னோர்கள் கருதி வருகின்றனர். இந்த தைப்பூச திருநாளில் முருகனிடம் வேண்டி விரதம் இருந்து வந்தால் கேட்டது கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
மேலும் குரு பகவானுக்கு உரிய நாளான வியாழக்கிழமை அன்று வந்துள்ள தைப்பூசம் இன்னும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்பட்டு வருகிறது. சிறப்பு வாய்ந்த தைப்பூச தினத்தன்று காலை முதல் மாலை வரை முருகனை விரதம் இருந்து வருவது குடும்பத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
இவ்வாறு விரதம் இருக்கும்போது பழங்களையும், பாலையும் மட்டுமே சாப்பிட்டுவிட்டு மாலையில் முருகனையும், முருக வேலையும் சேர்த்து வழிபடுவது நன்மையை தரும். முடிந்த வரை காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் முருகனை தரிசித்து வருவது சிறந்த நன்மையை ஏற்படுத்தும் என்று கூறி வருகின்றனர்.
இதனை தவிர்த்து பல முருக பக்தர்கள் தைப்பூசம் தொடங்குவதற்கு முன்பு 48 நாட்கள் விரதம் இருந்து வருகின்றனர். இவ்வாறு விரதம் இருந்து வந்தால் முருகன் கேட்டதை கொடுப்பார் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே நிலவி வருகிறது. மேலும் பார்வதி தேவி முருகனுக்கு ஞானவேல் கொடுத்தது, இந்த தைப்பூச தினத்தில் தான் எனவே பார்வதி தேவியையும் சேர்த்து வணங்குவது நன்மையை ஏற்படுத்தும்.