Tn Govt: 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு... டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 9000 கோடி ரூபாய் முதலீடு...!
டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 5 ஆண்டுகளில், 9000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழக அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
மேலும், அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக்கூடிய உயர் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களையும் (capital intensive high-tech Industries), பெருமளவிலான வேலைவாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் (Employment intensive Industries) ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, சென்னையில் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகவும் சிறப்பான முறையில் நடத்தப்பட்டு, முன்னெப்போதும் இல்லாத அளவாக, ரூ.6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
வாகன உற்பத்தித் திட்டத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 5 ஆண்டுகளில், 9000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இத்தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் வாகனத் தொழிற்சாலை அமைக்கப்படுவதற்காக, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு,மற்றும் டாடா மோட்டார்ஸ் குழுமத்தின் தலைமை நிதி அலுவலர் பாலாஜி ஆகியோரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.