டெல்லி: "600 ஆண்டுகள் பழமையான மசூதி இடிப்பு.." புதிய மசூதி கட்டி தர உள்ளூர்வாசிகள் கோரிக்கை.!
தெற்கு டெல்லியின் மெஹ்ராலியில் உள்ள சஞ்சய்வான் பகுதியில் இருந்த 600 ஆண்டுகள் பழமையான மசூதியை கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு டெல்லி மேம்பாட்டு ஆணையம் இடித்தது. இது தொடர்பாக அதே இடத்தில் புதிய மசூதி கட்டி தர வேண்டும் என உள்ளூர்வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சஞ்சய்வான் பகுதியில் "சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடமாக மசூதி இருந்ததால் ஜனவரி 30 அன்று அகூந்த்ஜி மசூதி மற்றும் பெஹ்ருல் உலூம் மதரஸா இடிக்கப்பட்டதாக டெல்லி மேம்பாட்டு ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. மேலும் மதக் குழுவின் பரிந்துரைகளின் படி மசூதி இடிக்கப்பட்டதாகவும் உயர் நீதிமன்றத்தில் டெல்லி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது .
இந்நிலையில் மசூதி மற்றும் மதரசாவுடன் சேர்த்து கல்லறையையும் இடித்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக பேசிய தர்கா குதுப் சஹானின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஃபௌசன் அகமது சித்திக் "மசூதி, மதரஸா மற்றும் கல்லறை இடிக்கப்பட்ட பகுதியில் யாரையும் செல்ல விடாமல் தடுப்புச் சுவர்கள் வைத்து அனுமதி மறுக்கப்படுவதாக" தெரிவித்திருக்கிறார்.
கடந்த மாதம், 6 நூற்றாண்டுகள் பழமையானதாகக் கூறப்படும் மசூதி இடிக்கப்பட்ட மெஹ்ராலியில் நிலம் தொடர்பாக தற்போதைய நிலையைத் தொடருமாறு டெல்லி உயர் நீதிமன்றம் தில்லி மேம்பாட்டு ஆணையத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை பிப்ரவரி 12-ஆம் தேதி மீண்டும் நடைபெறும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.அகூன்ஜி மசூதி அமைந்துள்ள இடத்தில் 'DDA' தற்போதைய நிலையைப் பராமரிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறது.
மசூதி இடிப்பு குறித்து பேசி இருக்கும் சித்திக் " மசூதி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்தால் விதிமுறைகளை மீறிய கட்டிடத்தின் பகுதிகள் மட்டும் இடிக்கப்பட்டு இருக்க வேண்டும். முழு மசூதியையும் இடிப்பது எந்த வகையில் நியாயமாகும் என கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் அப்பகுதியில் உள்ள மக்கள் கல்லறையை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். திடீரென யாராவது ஒருவர் இறந்தால் அவர்களது உடலை எங்கே எடுத்துச் செல்வார்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.
இடிக்கப்பட்ட மதரஸாவில் 25 அனாதை குழந்தைகள் தங்கி கல்வி கற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது. திங்கள் கிழமை அதிகாலை 5 மணி அளவில் வந்த டெல்லி மேம்பாட்டு அதிகாரிகள் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை வெளியேற்றிவிட்டு மசூதி மற்றும் மதரசாவை இடித்ததாக நசீர் அலி என்பவர் தெரிவித்திருக்கிறார் இவர் மசூதியில் கடந்த 48 வருடங்களாக பணியாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மசூதி இடிக்கப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு வக்ஃப் வாரியம் உயர்நீதி மன்றத்தில் மனு அளித்துள்ளது. மேலும் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில்நிலவரத்தை நேரடியாக பராமரிக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தி இருக்கிறது. இடிக்கப்பட்ட இடத்தில் புதிய மசூதி கட்டி தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது.