"மிகுந்த மன வேதனை அடைந்தேன்" ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்…!
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ-வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் பேரனும், சொல்லின் செல்வர் சம்பத்தின் அவர்களின் மகனும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ-வுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவுக் காரணமாக கடந்த மாதம் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டர். அங்கு அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஒரு மாதத்திற்கு மேலாக செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்தார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார். ஆனால் அவரது மகன் திருமகன் ஈவேரா மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வென்று 2023ல் மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் பிரபலங்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், "ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்" தவெக தலைவர் விஜய் இரங்கலை தெரிவித்துள்ளார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவு குறித்து தவெக தலைவர் விஜய்யின் பதிவில், "மிகப்பெரிய அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரும், தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் ஒன்றிய ஜவுளித்துறை இணை அமைச்சரும், தற்போதைய ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமான செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்" என பதிவிட்டுள்ளார்.
Read More: சிறையில் இருந்து வந்த அல்லு அர்ஜுனை கண்ணீருடன் கட்டிப்பிடித்த மனைவி… எமோஷனல் வீடியோ…