இன்று தமிழகம் வரும் பிரதமர் மோடி...! 35-க்கும் மேற்பட்ட முக்கிய பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை...!
இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தமிழக பாஜக நிர்வாகிகள் 35 பேர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய அளவிலான கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை நடத்தும் வாய்ப்பு இந்த ஆண்டு தமிழகத்துக்கு கிடைத்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இப்போட்டிகள் இன்று முதல் ஜன.31-ம் தேதி வரை நடைபெறுகின்றன. சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் இதன் தொடக்க விழா இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மாலை 4 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு 4.50 மணிக்கு வருகிறார். அங்கிருந்து நேப்பியர் பாலம் அருகே உள்ள ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டரில் வருகிறார். பின்னர், காரில் நேரு உள்விளையாட்டு அரங்குக்கு வருகிறார். அவருக்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
நாளை காலை திருச்சி சென்று, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார். பின்னர், ராமேசுவரம் சென்று ராமநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்கிறார். நாளை இரவு ராமகிருஷ்ண மடத்தில் தங்குகிறார். நாளை மறுநாள் காலை ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனிதநீராடும் பிரதமர் மோடி,பின்னர் தனுஷ் கோடி அரிச்சல் முனையில் உள்ள கோதண்டராமர் கோயிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்ற பிறகு, டெல்லி திரும்புகிறார்.
இன்று இரவு ராஜ்பவணில் தங்கும் பிரதமர் மோடியை, தமிழக பாஜக நிர்வாகிகள் சந்திப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தமிழக பாஜக நிர்வாகிகள் 35 பேர் பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலை ஏற்படும் அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.