தொண்டர்களே இல்லாத காங்.,!… பிரதமர் பதவிக்கு தகுதியானவர்களே இல்லை!… அண்ணாமலை விளாசல்!
இண்டியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் இல்லை” என வந்தவாசியில் நடைபெற்ற என் மண், என் மக்கள் யாத்திரையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார்.
என் மண், என் மக்கள் யாத்திரையை தமிழக பாஜகத் தலைவர் அண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நேற்றுமாலை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் வலிமைக்காக ஆட்சி நடத்தி வரும் பிரதமர் மோடி, 3-வது முறையாக மீண்டும் பிரதமாக வர வேண்டும். உலகளவில் மிகப் பெரிய பொருளாதார நாடாக 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது.
மோடியின் ஆட்சி, நேர்மையான ஆட்சி என பெயர் பெற்றுள்ளது. 2014, 2019-ல் பெரும்பான்மை இருந்தும், நாடாளுமன்ற சட்டத்தை இயற்றாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகு ராமர் கோயிலை பிரதமர் மோடி கட்டி உள்ளார். ஆங்கிலேயர்கள் மற்றும் முகாலயர்கள் ஆட்சியில் தொலைத்த நமது நாட்டின் கலாச்சாரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி மசூதியும் கட்டப்பட உள்ளது.
பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை ஜனாதிபதியாக்கி, சமூக நிதியை நிலை நாட்டி உள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் பணக்கார நபர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த பத்ம விருதுகளை, சாதனை படைத்த சாதாராண மக்களுக்கும் வழங்கி கவுரவித்துள்ளார். ஏழை மக்களை நோக்கி மோடியின் ஆட்சி செல்கிறது. இண்டியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் இல்லை. பிரதமர் பதவிக்கு தகுதியானவர் மோடி மட்டுமே.
கரூர், சிவகங்கையில் கூட்டம் நடத்தி ஜோதிமணிக்கும், கார்த்திக் சிதம்பரத்துக்கு மீண்டும் சீட் கொடுக்க வேண்டாம் என காங்கிரசார் கூறுகின்றனர். தொண்டர்கள் வெளியே சென்றுவிட்டனர், தலைவர்கள் மட்டும் காங்கிரசில் உள்ளனர். மக்களுக்காக உழைக்கக் கூடிய கட்சி பாஜக. மோடி கைகாட்டும் நபரிடம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியை கொடுங்கள். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து 39 எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். வந்தவாசியில் விஆர்எஸ் மற்றம் ஏபிஆர் நிதி நிறுவனத்தின் சொத்துகளை பறிமுதல் செய்து நீதிமன்றம் மூலம் முதலீடு செய்தவர்களிடம் ஒப்படைக்க டிஜிபியிடம் மனு அளித்து பாஜக போராடும். பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாக இருக்கும்” என்றார்.