பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்...? என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும்..? எதிர்பார்ப்பில் மக்கள்..!!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் தற்போதைய 17-வது லோக்சபா பதவிக்காலம் ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 18-வது லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு 17-வது லோக்சபாவுக்கான தேர்தல் தேதி மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதேபோல 18-வது லோக்சபாவுக்கான தேர்தல் தேதி மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படக் கூடும் என தெரிகிறது.
நாட்டின் அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களுடனும் இந்திய தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனைகளின் முடிவில் லோக்சபா தேர்தல் தேதி எப்போது அறிவிப்பது என தீர்மானிக்கப்படும். லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் களமிறங்கியுள்ளன. மத்தியில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி கட்சிகள் தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் பட்டியல் குறித்து தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதற்கிடையே, 17-வது லோக்சபாவின் இறுதிக் கூட்டம் அதாவது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கும் என கூறப்படுகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுவார். இதனைத் தொடர்ந்து மத்திய இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும். இந்த இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.