வெடிவிபத்தில் சிக்கிவிட்டதா உங்கள் கார்?… இன்சூரன்ஸ் பணம் எப்படி வாங்குவது?
கார் நிறுவனங்களிடையே போட்டா போட்டி நிலவி வருகிறது. அந்தவகையில் கார் நிறுவனங்கள் அனைத்தும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. கார் வாங்க நிறைய சலுகைகள் கிடைப்பதால் வங்கிக் கடன் பெறுவது எளிதாக இருப்பதாலும் சொந்தமாக ஒரு கார் வாங்குவது என்பது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. இதனால் வாகன நெரிசலும் அதிகரித்து விட்டது. சொல்லப்போனால் கார்களை நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி போதாத சூழல் உருவாகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நிறையப் பேர் சாலைகளிலும் தெருக்களிலும் காரை நிறுத்திவிட்டுச் சென்றுவிடுகின்றனர்.
இந்தியாவில் பரவலாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து உற்சாகமடைந்துவருகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், பட்டாசுகளால் உங்கள் காருக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதற்கு காப்பீடு வாங்குவது எப்படி என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். அதற்கு நீங்கள் கவலைப்பட வேண்டியதே இல்லை. காருக்கு மொத்தம் மூன்று வகையான காப்பீடுகள் உள்ளன. மூன்றாம் நபர் காப்பீடு, விரிவான காப்பீடு மற்றும் தனி காப்பீடு. விபத்து ஏற்பட்டால் கிடைப்பது மூன்றாம் நபர் காப்பீடு. மற்ற இரண்டு காப்பீடுகளும் தீ அல்லது ஏதேனும் வெடிபொருள் காரணமாக காருக்கு ஏற்படும் சேதத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே, காப்பீட்டு நிறுவனம் உங்களுக்காக இரண்டாவது மற்றும் மூன்றாவது காப்பீட்டைப் பயன்படுத்தி நிவாரணம் வழங்குகின்றன.
உங்கள் காருக்கு ஏதேனும் வெடி விபத்து நடந்தால், உடனடியாக உங்கள் காப்பீட்டு ஏஜெண்டுகு தெரிவிக்க வேண்டும். அடுத்து, எஃப்ஐஆர் பதிவு செய்ய மறக்காதீர்கள். ஏனென்றால் அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களும் முதலில் எஃப்ஐஆர் நகலை உங்களிடம் கேட்கும். அதன் பிறகு, உங்கள் கிளைம் சரியானது என்று உறுதி செய்யப்பட்டவுடன் காப்பீட்டு நிறுவனம் அதை அங்கீகரிக்கும். அதன் பிறகு உங்கள் முழு ஆவணங்களையும் முகவரிடம் ஒப்படைக்க வேண்டும். அடுத்த சில நாட்களில் உங்களுக்கு இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும்.
மேலும், உங்களுடைய இன்சூரன்ஸ் கோரிக்கையை காப்பீட்டு நிறுவனங்கள் நிராகரிக்க வாய்ப்பு உள்ளது. இன்சூரன்ஸ் நிறுவனம் பேட்டரி பழுதால் ஏற்படும் சேதம், கேஸ் கிட் மூலம் ஏற்படும் தீ அல்லது வாகனத்தின் உள் வயரிங் பிரச்சனைகளால் ஏற்படும் சேதத்தை ஈடுசெய்யாது. எனவே, உங்கள் வாகனத்தின் பராமரிப்பில் அடிக்கடி கவனம் செலுத்துவது நல்லது. இல்லாவிட்டால் காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் போக வாய்ப்பு உள்ளது.