குளிர்காலத்தில், குழந்தைகளுக்கு தயிர் கொடுக்கலாமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..
குளிர்காலம் தொடங்கிய நிலையில், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் அடிக்கடி நோய்வாய்ப்படுவது உண்டு. குறிப்பாக, பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி சற்று குறைவாகவே இருப்பதால், குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவார்கள். ஏனென்றால், குளிர்காலங்களில் வைரஸ்கள் நீண்ட காலம் ஒரு மேற்பரப்பில் உயிருடன் இருக்கும். இதனால், அவர்களுக்கு மருத்துவ செலவுகள் அதிகம் செய்ய வேண்டியிருக்கும். எனவே, முடிந்தவரை குளிர்காலங்களில் குழந்தைகளை வெளியே அனுப்பாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், குளிர்ச்சியான சூழலில் தான் தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகம் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது போன்ற குளிர் காலங்களில் குழந்தைகளுக்குப் பழங்கள், தயிர் ஆகியவை கொடுக்க கூடாது என்று பலர் கூறுவது உண்டு. ஏனெனில், பழங்கள் மற்றும் தயிர் சளியை உண்டாக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் இவர்களின் இந்த நம்பிக்கை அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்படவில்லை. மாறாக, பழங்கள் மற்றும் தயிர் இரண்டிலும் பல ஆரோக்கியமான சத்துக்கள் உள்ளது. ஆம், பழங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் அதிகம் உள்ளது. மேலும் தயிரில், குடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் புரோபயாடிக்குகள் அதிகம் உள்ளது. ஆனால், உண்மையிலே ஜலதோஷம் வைரஸ்களால் மட்டும் தான் ஏற்படுகிறது, நாம் உண்ணும் உணவுகளால் அல்ல. இதை புரிந்துக்கொண்டு, ஆரோக்கியமான பழங்களையும் தயிரையும் உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள்.