Budget 2024: பெண் விவசாயிகளை குறி வைக்கும் பாஜக.! பாராளுமன்றத் தேர்தலுக்கு மாஸ் ப்ளான்.!
நடப்பு ஆண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட் வருகின்ற பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவின் நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆறாவது முறையாக மத்திய budget தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த வருடம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் தற்போது தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக அமைய இருக்கிறது.
இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் பெண்கள் நலனில் அதிக அக்கறை செலுத்தி சிறப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்து இருக்கிறது. மேலும் பொது தேர்தலுக்கு முன்பாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால் அதில் பொது மக்களுக்கு சிறப்பு சலுகைகள் இருக்கும் என அனைவரும் இந்த பட்ஜெட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக நிலம் வைத்திருக்கும் விவசாய பெண்களுக்கு பிரதமரின் கிசான் சம்மான் நிதியை இரட்டிப்பாக வழங்குவதற்கு ஆலோசனை நடந்து வருவதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி கிசான் சம்மான் திட்டத்தில் தற்போது 11 கோடி விவசாயிகள் நிதி உதவி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6000 ரூபாய் நிதியாக வழங்கப்பட்டு வருகிறது. சொந்தமாக நிலம் வைத்திருக்கும் ஆண் மற்றும் பெண் விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெற்று வருகின்றனர். எனினும் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் பெண் விவசாயிகளுக்கு பிரதமரின் கிசான் சம்மான் நிதியை இரண்டு மடங்காக அதிகரித்து 12,000 ரூபாய் வழங்குவதற்கான திட்டம் வர இருக்கின்ற புதிய பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்படும் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதியை பெண்களுக்கு இரட்டிப்பாக கொடுப்பதன் மூலம் அரசுக்கு 120 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனினும் இந்தத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதுவரை 11 கோடி விவசாயிகளுக்கு 15 தவணைகளாக 2.8 லட்சக் கோடி ரூபாய் பிரதம மந்திரியின் கிசான் சம்மான் திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் இருக்கும் மொத்த விவசாயிகளில் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் பெண் விவசாயிகள் 13% உள்ளனர்.
140 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட நம் நாட்டில் விவசாயிகள் தான் மிகப்பெரிய வாக்கு வங்கிகளாக இருக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையாக இருப்பது பெண்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே பெண் விவசாயிகளுக்கு அதிகப்படியான சலுகைகளை வழங்கி அதன் மூலம் 2024 ஆம் வருட பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய வெற்றி அடையலாம் எனவும் ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் டிசம்பர் மாதம் நடந்து முடிந்த 4 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பெண்கள் அதிக அளவில் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்து இருக்கின்றனர். மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி பெற்ற வாக்குகளில் 51% வாக்குகளை பெண்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வழங்கியிருக்கின்றனர்
மேலும் மத்திய பிரதேசம் மாநில தேர்தலின் போது திருமணமான பெண்களுக்கான பணப்பரிமாற்றத் திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி அறிமுகப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் 35 கோடி பெண்கள் வாக்களிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் பெண்களின் வாக்குகளை குறிவைத்து அதன் மூலம் மிகப்பெரிய வெற்றிக்கு காய் நகர்த்துவதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.