"முதலில் தூது.. பிறகு மிரட்டல்.." பாஜகவின் 'பலே' திட்டம்..!! சிக்குவாரா எடப்பாடி.? வேகமெடுக்கும் அரசியல் களம்.!
கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஒரே கூட்டணியில் பயணித்த அதிமுக மற்றும் பாஜக, 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. 2019 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக தொண்டர்களின் அதிருப்தியை தொடர்ந்து பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
அதிமுக தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்து வந்த அண்ணாமலையின் பேச்சும், கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுக எந்த ஒரு சூழலிலும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்காது என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சியின் தலைமையில் வலுவான கூட்டணியை அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பாமக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் போன்ற கட்சிகளுடனும் அதிமுக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா அதிமுக கட்சி கூட்டணியில் இணைவதற்கான கதவுகள் திறந்து இருப்பதாக சமீபத்தில் தெரிவித்து இருந்தார். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவுடனான கூட்டணி முறிவு அந்த கட்சியை மேலும் பலவீனப்படுத்தும் என்பதால் அமித்ஷா அதிமுகவை தங்களது கூட்டணியில் இணைப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார். மேலும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையும் தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணி பற்றிய இறுதி முடிவு தெரிய வரும் என கூறியிருந்தார்.
மேலும் அதிமுக உடனான கூட்டணிக்கு பாரதிய ஜனதா கட்சி தீவிரம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தக் கட்சிக்கு கோரிக்கை வைத்து பார்ப்போம். அதற்கு சரி வரவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக தலைவர்களின் பழைய வழக்குகளை தோண்டி அவர்களை மிரட்டி பணிய வைக்கும் திட்டமும் பாஜகவிடம் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. எனினும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கூட்டணியை முடித்துக் கொண்டதாக அறிவித்தாலும் பாரதிய ஜனதா கட்சியை இதுவரை நேரடியாக எதிர்த்தது போன்ற இந்த ஒரு பேட்டியையும் வெளியிடவில்லை. இதனால் மீண்டும் பாஜக-அதிமுக கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.