மகாராஷ்டிராவில் வெறும் 155 வாக்கு வாங்கி படுதோல்வியை சந்தித்த பிக் பாஸ் பிரபலம்..!
இன்ஸ்டாகிராமில் 55 லட்சத்துக்கும் அதிகமான பாலோவெர்ஸ்களை வைத்திருக்கும் ஹிந்தி பிக்பாஸ் பிரபலம் அஜஸ் கான், மும்பையின் வெர்சோவா தொகுதியில் போட்டியிட்ட நிலையில் வெறும் 155 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். நோட்டா கூட 700க்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது.
பிக் பாஸ் புகழ் நடிகரும், அரசியல்வாதியுமான அஜாஸ் கான், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வெர்சோவா தொகுதியில் வெறும் 155 வாக்குகள் பெற்று, தோல்வியை சந்தித்தார். சந்திரசேகர் ஆசாத்தின் ஆசாத் சமாஜ் கட்சியால் (கன்ஷி ராம்) களமிறங்கிய அஜாஸ் கான், இன்ஸ்டாகிராமில் 55 லட்சத்துக்கும் அதிகமான பாலோவெர்ஸ்களை வைத்துள்ளார். சினிமா மற்றும் சமூக வலைத்தள பிரபலம் அரசியலில் எதிரொலிக்காது என்பதற்கு இது உதாரணம்.
2024 மாநிலங்களவை தேர்தலில் அரசியலுக்கு வந்த அவர் மும்பை வடக்கு மத்திய தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் அங்கும் அவர் படு தோல்வி சந்தித்தார். இதற்கிடையில், வெர்சோவா தொகுதியில் சிவசேனாவின் (யுபிடி) ஹாரூன் கானுக்கும், பாஜகவின் பாரதி லவேக்கருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. எனினும் ஹரூன் கான் 1,600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அஜாஸ் கான் 200 வாக்குகளை கூட தாண்ட முடியாமல் போராடிய நிலையில், மகாயுதி கூட்டணி மாநிலம் முழுவதும் மேலாதிக்க வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது, 221 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, காங்கிரஸ், சிவசேனா, மற்றும் சரத் பவாரின் NCP பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி (MVA) ஒரு தோல்வியை சந்தித்துள்ளது.