BJP கூட்டணியில் இணைந்த மேலும் ஒரு கட்சி..!! யார்..? எந்த தொகுதியில் போட்டி தெரியுமா..?
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய அளவில் பலமாக கூட்டணியை அமைத்துள்ள பாஜக, தமிழ்நாட்டில் மட்டும் தடுமாறி வருகிறது. அக்கூட்டணியில் இருந்த அதிமுக, வெளியேறி விட்ட நிலையில் வலுவானக் கட்சிகள் இல்லாமல் தவித்து வருகிறது. அதிமுக இல்லையென்றாலும் தேமுதிக பாமக உள்ளிட்ட கட்சிகளையாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜக முயன்று வருகிறது. ஆனால், அந்தக் கட்சிகள் அதிமுக மற்றும் பாஜக என இரண்டு பக்கமும் கைகளை நீட்டி வருவதால் கூட்டணி பேரங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
பிரதமர் மோடி தமிழ்நாட்டில் இன்று பொதுக்கூட்டத்திலும் பேச உள்ளார். அதில் கூட்டணி கட்சித் தலைவர்களை மேடை ஏற்றிட வேண்டும் என்று பாஜக எவ்வளவு முயன்றும் அது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சிறிய மற்றும் ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகள் தான் அந்தக் கூட்டணியில் இணைந்து வருகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக இணைந்தது. ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் ஆகியோர் ஏற்கனவே பாஜக கூட்டணியில் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்திருக்கிறது. மக்களவைத் தேர்தலில் தாமரை சின்னத்தில் தான் போட்டியிடப் போவதாகவும், எந்த தொகுதி என்பது பேச்சுவார்த்தைக்கு பின்னர் முடிவு செய்யப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களை தவிர ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி தினகரன் ஆகியோரும் கூட்டணியில் இணைய உள்ளனர். தற்போதைய நிலையில் கூட்டணியை உருவாக்குவதில் அதிமுகவைவிட பாஜக வேகம் காட்டி வருகிறது.
English Summary : John Pandian joins BJP alliance