LOK SABHA | அமித் ஷா நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வி.! பாஜகவுக்கு மகாராஷ்டிராவில் தொடரும் சிக்கல்.!
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் மும்முரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. தற்போது இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து வருகிறது
மேலும் மாநிலங்களில் உள்ள கூட்டணி கட்சிகளுடனும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது . பாரதிய ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏக்னாத் சிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் அஜித் பவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு கட்சிகளும் அதிக தொகுதிகள் கேட்பதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக இழுப்பறி நிலை நீடித்து வருகிறது.
பாரதிய ஜனதா கட்சி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 பாராளுமன்ற தொகுதிகளில் 34 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்து இருக்கிறது. மேலும் சிவசேனா கட்சிக்கு 8 முதல் 10 தொகுதிகளும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் இரண்டு கட்சிகளுமே தங்களுக்கு அதிகப்படியான தொகுதியை ஒதுக்க வேண்டும் எனக் கூறி பாஜகவிற்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. மேலும் இதன் காரணமாக சிவசேனா கட்சி தொண்டர்களும் பாஜகவை விமர்சித்து வருகின்றனர்.
இது தொடர்பாக மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர்கள் தங்கள் தலைமை இடம் தெரிவித்ததை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் வைத்து ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் கலந்து கொண்டார். நீண்ட நேர பேச்சுவார்த்தையின் போதும் தொகுதி பங்கீடு தொடர்பாக உடன்படிக்கை ஏற்படவில்லை. சிவசேனா கட்சி கேட்கும் தொகுதிகளை தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கேட்பதால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வேட்பாளர்கள் பட்டியலை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.