அண்ணாமலையின் வாகனத்தின் முன் படுத்து புரண்ட அதிமுகவினர்..!! கோவையில் பரபரப்பு..!!
சூலூர் அருகே பிரசாரத்தின் போது கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வாகனத்தை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் சிறைபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தல் ஏப்.19-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி அனைத்து கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் மு..க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களும், பிரதமர் மோடி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று இரவு அதிமுக, பாஜகவினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தொட்டிபாளையம் பகுதியில் அதிமுக வேட்பாளர் வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், சூலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே பகுதிக்கு பாஜக வேட்பாளர் அண்ணாமலையும் வாக்கு சேகரிக்க வந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பாஜகவினரின் வாகனம், அதிமுகவின் வாகனத்தை உரசி விட்டு நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அண்ணாமலையின் பிரசார வாகனத்தை சிறைபிடித்து சாலையில் படுத்து அதிமுக வேட்பாளரும், அதிமுகவினரும் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர்.
அப்போது, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தாங்கள் பிரசாரம் செய்து வருவதாகவும், ஆனால், பாஜகவினர் மாதப்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பிரசாரத்தில் ஈடுபட்டதாக அதிமுகவினர் குற்றம்சாட்டினர். பாஜகவினருக்கு காவல்துறை ஆதரவு தருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினர். பின்னர், இருதரப்பையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். சூலூர் அருகே பிரசாரத்தின் போது, அதிமுக - பாஜகவினரிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Read More : ‘பாஜகவுடன் கள்ள கூட்டணி’..!! ’அதிமுக ஆட்சியில் இருண்ட காலம்’..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் விமர்சனம்..!!