பலே கேடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரில் வட்டி இல்லாக் கடன்.!தமிழகப் பெண் செய்த நூதன மோசடி.!
தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண், ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரில் வட்டியில்லா கடன் கொடுப்பதாக கூறி நூற்றுக்கணக்கான மக்களை ஏமாற்றியுள்ளார். 17 கோடி ரூபாயை வட்டி இல்லா கடன் நிதிக்காக ரிசர்வ் வங்கி விடுவித்ததாக பொய் செய்திகளை பரப்பி, கர்நாடகா மற்றும் தமிழக எல்லையோரங்களில் உள்ள கிராம மக்களை ஏமாற்றியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள காவல் நிலையத்தில், பவித்ரா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஓசூரைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் 'ப்ளு விங்ஸ்' எனப்படும் அறக்கட்டளையை நிறுவி வருகிறார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் பெயரில் வட்டி இல்லா கடன், கிராம மக்களுக்கு வழங்கப்படுவதாக கூறி நூற்றுக்கணக்கான மக்களை ஏமாற்றியுள்ளார்.
தமிழகம் மற்றும் கர்நாடக எல்லையோரம் வசிக்கின்ற கிராம மக்களை நேரில் சந்தித்துள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரில் கிராம மக்களுக்கு கடன் வழங்குவதற்காக ரிசர்வ் வங்கி, ரூபாய் 17 கோடியை விடுவித்ததாக பொய்யை பரப்பியுள்ளார்.
மக்களை நம்ப வைப்பதற்காக, நிர்மலா சீதாராமனின் கையெழுத்திட்ட போலியான கடிதத்தையும் காட்டியுள்ளார். 500 ரூபாய் மூட்டைகள் உள்ள படங்கள் மற்றும் வீடியோக்களை போலியாக தயார் செய்து மக்களை வலையில் வீழ்த்தி இருக்கிறார்.
பின்னர் வட்டி இல்லாக் கடனை பெறுவதற்காக, டெபாசிட் பணத்தை செலுத்தும்படி கிராம மக்களிடம் வசூல் செய்திருக்கிறார். கடன் தொகை வராததால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். தனித்தனியாக இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் உள்ள அனேகலின் சூர்யா நகர் மற்றும் அத்திபெலே காவல் நிலையங்களில், பவித்ரா உள்ளிட்ட 13 பேர்களின் மேல் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நிதியமைச்சரின் பெயரில் ஒரு பெண் இப்படி ஒரு நூதன மோசடியை செய்தது, பலரையும் அதிர்ச்சியடையச் செய்தது.