பரபரப்புக்கு மத்தியில்... இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடர்...!
தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, திருப்பி அனுப்பியுள்ள சட்ட மசோதாக்களை தமிழக அரசு மீண்டும் நிறைவேற்ற உள்ளதால் இந்த சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை வரலாற்றில், ஆளுநரால் திருப்பி அனுப்பட்ட மசோதாக்கள், மறுபரிசீலனை செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். ஆளுநர் திருப்பி அனுப்பப்பட்ட மசோதாக்களின் சரியான எண்ணிக்கையில் தெளிவு இல்லை என்றாலும், இந்தச் சட்டங்களில் பெரும்பாலானவை ஆளுநருக்குப் பதிலாக முதலமைச்சரைப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக நியமிக்கும் வகையில் பல்வேறு மாநிலப் பல்கலைக்கழகங்களின் சட்டங்களைத் திருத்துவதற்கான முன்மொழிவு மசோதாக்கள் உள்ளிட்ட 10 மசோதா உள்ளன.
சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் காலதாமதம் செய்யக்கூடாது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அப்பாவு, "ஏற்கெனவே உள்ள சட்ட விதிகளின்படி, சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்ப கூடிய மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி அளித்து, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்.
அதில் ஏதேனும் நிறைகுறைகள் இருக்கும்பட்சத்தில், மாநில அரசுக்கு திருப்பி அனுப்பிவைக்க வேண்டும். ஆளுநர் தற்போது நிலுவையில் இருந்த சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பியிருக்கிறார். அதற்கு நீதிமன்ற கருத்து காரணமாக இருக்காலம் என சபாநாயகர் அப்பாவு கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.