உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! தமிழகத்தை நோக்கி நகரும் அபாயம்..!! டெல்டா மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!!
தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு - வட மேற்காக நகர்ந்து வரும் 25ஆம் தேதி மத்திய வங்கக் கடலில் நிலை கொள்ளும். மேலும், அது தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதன் காரணமாக வரும் 26ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 25ஆம் தேதி தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, கடலுார், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். வரும் 26 முதல் 28ஆம் தேதி வரை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.