தயார் நிலையில் 4967 சிறப்பு நிவாரண முகாம்கள்!… அமைச்சர் ராமசந்திரன் தகவல்!
தென் கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. கடலூரில் 16 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது கனமழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர் மழையால், 10 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இதனிடையே, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், சென்னையில் மட்டும் 19 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாகக் கூறினார். நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கனமழை காரணமாக சாத்தனூர், கிருஷ்ணகிரி, பெருஞ்சாணி அணைகளில் 90% நீர் இருப்பு உள்ளதாகவும், செம்பரம்பாக்கம் ஏரியில் 85 % நீர் இருப்பு உள்ளதாகவும் கூறினார். பருவமழையை ஒட்டி 4,967 சிறப்பு நிவாரண முகாம்களும், கடலோர மாவட்டங்களில் 121 நிரந்தர உதவி பல்நோக்கு மையங்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.