ஃபெஞ்சல் புயலால் இரயில் சேவை நிறுத்தம்.. விழுப்புரம் மாவட்டத்திற்கு 100 சிறப்புப் பேருந்துகள்...!
ஃபெஞ்சல் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக இரயில் சேவை நிறுத்தப்பட்டதையடுத்து 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள், விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக இரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், தென்னக இரயில்வே விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, பொது மக்கள் தங்களது சொந்த இடங்களுக்கு பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள இரயில் நிலையங்களுக்கு 100 சிறப்புப் பேருந்துகளை இயக்கிட நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, ஃபெஞ்சல் புயலால் பெய்த பலத்த மழை காரணமாக, 30.11.2024 மற்றும் 01.12.2024 ஆகிய தினங்களில் விழுப்புரம், திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளானார்கள். மேற்கண்ட விழுப்புரம் மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.
மேலும், போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் களத்தில் ஆய்வு மேற்கொண்டு அறிவுறுத்தியதன் அடிப்படையிலும், தென்னக இரயில்வே விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இரயில் நிறுத்தப்பட்டு மேலும் செல்ல முடியாமல் வழியில் உள்ள இரயில் நிலையங்களில் உள்ள பயணிகளை பாதுகாப்பாக அவர்களது சொந்த இடங்களுக்கு செல்லும் வகையில், விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மாம்பழப்பட்டு இரயில் நிலையத்திற்கு 15 பேருந்துகள், வெங்கடேசபுரம் இரயில் நிலையத்திற்கு 15 பேருந்துகள், விழுப்புரம் இரயில் நிலையத்திற்கு 15 பேருந்துகள், அரகண்டநல்லூர் இரயில் நிலையத்திற்கு 15 பேருந்துகள், சென்னை செல்லும் பயணிகள் வசதிக்காக வழக்கமாக செல்லும் பேருந்துகளுடன் கூடுதலாக 40 பேருந்துகள் என மொத்தம் 100 சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்கள்.